KONDAVIL

Pic 1

Welcome

Welcome to the official web site of the People's Association of Kondavil.

 

 

 

 

கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.

 

இன்று...

 

ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.

 

கானா பிரபா


 

 

PEOPLE'S ASSOCIATION OF KONDAVIL

ஓய்ந்து விட்ட கான(மூர்த்தி)சுரம்

எங்களின் கானமூர்த்தி என்னும் நாதஸ்வர மேதை கடந்த புதன் கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவர். ஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.

எங்கள் ஊரவர் என்பதால் இன்னும் அதிகப்படியாக வி.கே.கானமூர்த்தி அவர்களை காணவும் அவரின் நாதஸ்வர வாசிப்பைக் காது குளிரக் கேட்கவும் பல்லாயிரம் தடவை எனக்கும் வாய்த்தது நான் புலம்பெயரும் வரை. கானமூர்த்தி அவர்களின் கடைசிமகன் சந்திரசேகர் என் சகபாடியும் கூட.

வெற்றிலை, சுண்ணாம்பு கொடுத்த செஞ்சிவப்பு வாயும், குங்குமப் பொட்டும், அலங்கார வேலைப்பாடு பதித்த அங்கவஸ்திரத்தைத் தோளில் சாய்த்து இவர் கோயிலுக்கு வரும் மிடுக்கே அழகு. எந்த நேரமும் சிரிப்பை தவழவிடும் எடுப்பான முகலட்சணம் இவருக்கு ஆயுளுக்கும் ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம்.

அமைதியாக வந்து உட்கார்ந்து வாயில் நாதசுரத்தின் பொருத்தியை வைத்து சுருதி சரி பார்த்து விட்டு இந்த சகோதரர்கள் நாதஸ்வர கானம் எழுப்ப ஆரம்பித்தால் , இவர்களின் திறந்த மேனியில் அலைபாயும் பதக்கம் பொருத்திய வடச்சங்கிலிகள் இசைந்து ஆட, அந்த நாதஸ்வர வாசிப்பு ஓயும் போது தேன் மழையில் முக்கிக் குளித்த பரவசத்தோடு ரசிகர்கள் திளைப்பார்கள்.

மேலே: எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா 2007 இல் எடுக்கப்பட்ட படம். இதில் நாதஸ்வரக் கலைஞர்கள் வரிசையில் நான்காவதாக நிற்கின்றார் அமரர் வி.கே.கானமூர்த்தி அவர்கள்

மேளச்சமாவினைப் பருகும் ஆவலோடு ஊர் ஊராகப் பெருந்திருவிழாக்களைத் தேடிச் சென்று இசையின்பம் தேடும் ரசிகர்கள் வி.கே.கானமூர்த்தி - வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களுக்காவும் நாடி ஓடிச் செல்வது காலம் காலமாக நம் ஈழத்தில் நிலவும் வழக்கில் ஒன்று.

இனி நான் ஊருக்குப் போகும் போது தொலைந்து போனவைகளில் கானமூர்த்தி அவர்களின் தரிசனமும் இருக்கப்போகின்றது என்று தட்டச்சுப் போதே பெரும் மூச்சு வந்து முன் நிற்கின்றது.

அந்த இறவாக் கலைஞன் மீண்டும் எம் மண்ணில் பிறக்கவேண்டும் என்ற பேராசையோடு
என் நினைவுகளின் ஓரமாக இவரை இருத்தி வைக்கின்றேன்.

தொடர்புபட்ட இடுகை: மேளச்சமா

திரு வி.கே.கானமூர்த்தி அவர்கள் கோண்டாவில் மேற்கு காலி கோவிலடியைச் சேர்ந்தவர். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 14 வது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக்கலையை முறைப்படி பயின்றவர். அதன்பின் இவர் மாவிட்டபுரம் ராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.

இளவயதிலேயே இசைக்கச்சேரிகளை நடத்திய இவர், பின்னர் தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.

மிக நீண்டகாலமாகவே நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களது கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லையெனுமளவுக்கு அகில இலங்கை முழுவதும் பெரும் புகழ் பெற்றிருந்தனர்.

கர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.

2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு இலங்கை அரசு கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவித்தது.

கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச் சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

நாட்டுச் சூழ்நிலைகளால் இசைவிற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்தபோதும் தனது பிறந்த மண்ணில் தொடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக சுகயீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர் செப்டெம்பர் இரவு யாழ்ப்பாணத்தில் உயிர் துறந்தார்

கானா பிரபா
Location: துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம், தமிழீழம்



 

free hit counter